உதயநிதி பிரியங் கார்கே மீது எப்ஐஆர்

லக்னோ செப். 6- சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி பேசியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், உத்தரபிரதேச மாநில காவல் நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உதயநிதி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்கு செய்யப்பட்டு உள்ளது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி, கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உதயநிதி தலையை சீவினால் 10 கோடி ரூபாய் பரிசு தருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இதே போல மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக நிர்வாகிகள் உதயநிதியின் சனாதனம் தொடர்பான பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மேலும் பல்வேறு காவல் நிலையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.இதற்கு பதிலடி கொடுத்த உதயநிதி, சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். எல்லோருக்கும், எல்லாமே கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். பல ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிக்கக்கூடாது என்று கூறினார்கள்,
பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று கூறினார்கள், கோயில்களுக்குள் செல்லக்கூடாது என்றார்கள். இந்த மூன்றையும் நாம் மாற்றி இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கர்நாடக மந்திரி பிரியங் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் ஹர்ஷ் குப்தா மற்றும் ராம்சிங் லோதி ஆகியோரின் புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.