உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் வியூகம்

புதுடெல்லி, மார்ச் 18-
2019 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டன. மேற்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் இக்கூட்டணி சில இடங்களில் வென்றாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
மேற்கு பிராந்தியங்களில் பாஜக 23 இடங்களில் வென்றது. ஆனால், இக்கூட்டணி தலா 4 இடங்களிலேயே வென்றது. மேற்கு உ.பி.யில் சஹாரன்பூர், பிஜ்னோர், அம்ரோஹா மற்றும் நகினா ஆகிய 4 தொகுதிகளில் பகுஜன் சமாஜும், சம்பல், மொராதாபாத், மெயின்புரி, ராம்பூர் ஆகிய இடங்களில் சமாஜ்வாதி கட்சியும் வெற்றி பெற்றன.
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். ராகுல் காந்தி அமேதியில் தோல்வியடைந்தார். பிரதமர் மோடி போட்டியிட்ட வாராணசி, கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள 30 தொகுதிகளில் ஒன்றாகும். இப்பிராந்தியத்தில், பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனியாக களமிறங்க முடிவுசெய்துள்ளார். இந்நிலையில் சமாஜ்வாதி காங்கிரஸின் இண்டியா கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.
சென்ற முறை பகுஜன் சமாஜுடனான சமாஜ்வாதி கூட்டணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில், கூடுதல் இடங்களை கைப்பற்றும் வியூகங்களுடன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையுடன் சமாஜ்வாதி – காங். கூட்டணி களமிறங்குகிறது.