உத்தரவாத திட்டங்களால் வளர்ச்சி பணிகளுக்கு தடை: காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

கலபுர்கி, பிப். 26: உத்தரவாத திட்டங்களால் வளர்ச்சி பணிகள் தடைபடுவதாக கலபுர்கி தெற்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அல்லம்பிரபு பாட்டீல் தெரிவித்தார். கலபுர்கியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 25) நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், உத்தரவாதத் திட்டங்களுக்காக ரூ.65 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் அனைத்துப் பெண்களும் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள். இலவச அரிசி, பெண்கள் கணக்கில் தலா இரண்டாயிரம் பணம் போடுகிறோம். இதனால், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படாமல், அதிகளவில் செலவழிக்கப்படுகிறது என்றார். இருப்பினும், உங்கள் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் இருக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். 5 ஆண்டுகளுக்குள் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் செய்வோம். இந்த ஆண்டு எங்கள் தொகுதிக்கு ரூ.9 கோடி மானியம் கிடைத்ததுள்ளது. இதனை 38 கிராமங்கள் மற்றும் 23 வார்டுகளுக்கு விநியோகிக்கப்படும். ஒவ்வொரு கிராமம் மற்றும் வார்டுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 4 கோடியில் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காங்கிரஸ் அரசு உத்தரவாதத் திட்டங்களை அமல்படுத்தியது. ரூ.40,000 கோடியை (ஐந்து உத்தரவாத திட்டங்களுக்கு) ஒதுக்க வேண்டியிருந்தது. வளர்ச்சிக்கு மானியம் வழங்க முடியாது. பாசனம் மற்றும் பொதுப்பணித்துறைக்கு கூட மானியம் கொடுக்க முடியாது. ஆனால் எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. முதல்வர் சித்தராமையா தனது அமைச்சரவை சகாக்களையும் பொறுமையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவைப் போலவே, கஜானாவை கடந்த பாஜக ஆட்சி காலி செய்ததாக சிவகுமார் குற்றம் சாட்டி உள்ளார் என்றார்.