உத்தராகண்ட் சுரங்க விபத்துமீட்புப் பணிகளில் முன்னேற்றம்

டேராடூன்: நவம்பர் . 22 – உத்தராகண்ட் சுரங்கத்தினுள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் செங்குத்து துளையிடுவதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்து தன்னிடம் பிரதமர் மோடி விசாரித்ததாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மாநில முதல்வர் தாமி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி இன்று தொலைப்பேசி வழியாக தொடர்பு கொண்டு உத்தரகாசி சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள், மருந்துகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகள் குறித்து விசாரித்தார். மத்திய நிறுவனங்கள், சர்வதேச நிபுணர்கள், மாவட்ட நிர்வாகம் போன்றவைகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மீட்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடுபத்தினர் மனதில் நம்பிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமரிடமிருந்து எங்களுக்கு கிடைக்கும் ஆலேசானைகள் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் புதிய உத்வேகத்தை தருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தொழிலாளர்களைத் தொடர்ந்து உயிருடன் வைத்திருக்கும் பொருட்டு சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு சூடான உணவுகள் கொடுக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை மாலையில் தொழிலாளர்களுக்கு புலாவும் பன்னீர் மதாரும் கொடுக்கப்பட்டன. இதற்கிடையே, பி.ஆர்.ஓ. நிறுவனம் செவ்வாய்க்கிழமை சுரங்கத்துக்கு அருகே செல்ல பாதை அமைத்திருந்ததைத் தொடர்ந்து மீட்பு பணிகளில் புதன்கிழமை புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. செங்குத்து துளையிடுவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் அன்சூ மணீஷ் குல்கோ கூறுகையில், “செங்குத்தாக துளையிடுவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது. செங்குத்து துளையிடுவதற்காக சுரங்கத்தின் உச்சிக்கு போடப்பட்ட சாலைப்பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. சுமார் 350 மீட்டர் தூரம் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.இதனிடையே திங்கள்கிழமை மாலையில் மீட்புக்குழுவினர் 6 அங்குலம் குழாய் மூலமாக சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. அவர்களுக்கு வாழைப்பழம், ஆரஞ்சுப்பழங்கள், மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. செவ்வாய்க்கிழமை மாலையில், அவர்களுக்கு வெஜ் புலாவ், பனீர் மதர் சப்பாத்தி வழங்கப்பட்டன. அதேபோல், சுரங்கத்துக்குள் எண்டோஸ்கோபி காமிரா அனுப்பப்பட்டு உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் முதல்முறையாக படம்பிடிக்கப்பட்டனர்.