உத்தவ் தாக்கரேவுடன் கவுதம் அதானி சந்திப்பு

மும்பை, செப். 22- சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியும் என இரண்டு பிரிவாக கட்சி உடைந்துள்ளது. இந்நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில் நடந்துள்ளது. இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை. மாநில அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் சூழ்நிலையில் அதானி – உத்தவ் தாக்கரே சந்திப்பு அதிக கவனம் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.