உத்யன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

பெங்களூரு, ஆக.19- பெங்களூர் நகரின் மையப்பகுதியில் உள்ள மெஜஸ்டிக் சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தை சுற்றிலும் புகை மூடியது பிளாட்பாரங்களில் இருந்த ரயில் பயணிகள் அலறி அடித்து ஓடினர் ரயில் நிலையம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது ரயில் நிலையத்தை தாண்டி மெஜஸ்டிக் பஸ் நிலையம் வரை புகை மண்டலம் காணப்பட்டது இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.
பெங்களூருவில் உள்ள சங்கொல்லி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு இன்று காலை 5.45 மணிக்கு உத்யன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. நின்று கொண்டிருந்த ரெயிலின் பி1 மற்றும் பி2 பெட்டிகளில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வரத்தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கிய 2 மணி நேரத்திற்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளதால் உயிர்சேதமோ, காயமோ இல்லை. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.இந்த நேரத்தில் ரயிலுக்குள் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தீ வேகமாக அணைக்கப்பட்டதால், சுற்றியுள்ள ரயில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தீ விபத்தால் மெஜஸ்டிக் ரயில் நிலையம் முதல் மெஜஸ்டிக் பேருந்து நிலையம் வரை கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. தீப்பிடித்த பெட்டியில் இருந்து மீதமுள்ள பெட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன.
விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும் என ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு சௌமியாலதா தெரிவித்துள்ளார்.