பெங்களூரு, ஆகஸ்ட் 31. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்தநிலையில்,கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு 9,329 கன அடியில் இருந்து 9,279 கன அடியாக குறைந்தது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 7,279 கன அடியாக குறைந்தது. கபினி அணையிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் தொடர்ந்து 6-வது நாளாக 2,000 கன அடியாக உள்ளது.
இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி வழியாக இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது.
இதனிடையே நேற்று முன் தினம் காவிரி மேலாண்மை வாரியம் கூடியது. அப்போது கர்நாடக அரசு வினாடிக்கு 5000 கனஅடி நீர் வீதம், 15 நாளைக்கு திறந்து விட வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டனையாக இந்த போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்.