உபேர், தாமஸ் கோப்பை பாட்மிண்டன்: கால் இறுதியில் இந்திய அணிகள் தோல்வி

செங்டு, மே 3- உபேர் கோப்பை பாட்மிண்டன் தொடரில் இந்திய மகளிர் அணி கால் இறுதி சுற்றில் 0-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது. சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் அனுபவம் இல்லாத வீராங்கனைகளை உள்ளடக்கிய இளம் இந்திய அணி கால் இறுதி சுற்றில் ஜப்பானை எதிர்த்து விளையாடியது. முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 53-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா 10-21, 22-20, 15-21 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீராங்கனையான அயா ஒஹோரியிடம் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியா கோஞ்செங்பம், ஸ்ருதி மிஷ்ரா ஜோடியானது உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நமி மட்சுயாமா, சிஹாரு ஷிடா ஜோடியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பிரியா கோஞ்செங்பம், ஸ்ருதி மிஷ்ரா ஜோடி 8-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தது.இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் 83-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் இஷாராணி பரூவா, தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோசோமி ஒகுஹாராவுடன் மோதினார். இதில் இஷாராணி 15-21, 12-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய ஆடவர் அணி தோல்வி: தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடரின் கால் இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி 1-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோல்வி அடைந்தது. சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி அணி கால் இறுதி சுற்றில் சீனாவை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஹெச்.எஸ்.பிரனாய் 21-15, 11-21, 14-21 என்ற செட் கணக்கில் ஷி யு-விடம் தோல்வி அடைந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி 15-21, 21-11, 12-21 என்ற செட் கணக்கில் லியாங் வெய், கெங், வாங் ஷெங் ஜோடியிடம் வீழ்ந்தது. இதன் பின்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் லக்சயா சென் 13-21, 21-8, 21-14 என்ற செட் கணக்கல் லி ஷி பெங்கை வீழ்த்தினார். ஆனால் அடுத்த நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் துருவ் கபிலா, சாய் பிரதீக் ஜோடி 10-21, 10-21 என்ற செட் கணக்கில் ஹீ ஜி டிங், ரென் ஜியாங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. முடிவில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் போட்டியை இழந்தது.