
சென்னை: அக். 4-
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று அரசுத் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உயிரிழப்பு நேரிட்ட நிலையில், கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டுவிட்டு விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓடியுள்ளதாக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வில்லிவாக்கத்தை சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த வாதம்: தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை, ‘ரோடு ஷோ’ செல்ல எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா: கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன்,
நகரச் செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கோரியுள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது.
நீதிபதி செந்தில்குமார்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதுதொடர்பான காணொளிகள் வேதனை அளிக்கின்றன. இந்த வழக்கில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அனைத்தையும் தமிழக அரசு அனுமதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
விஜய் பயணம் செய்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக காணொளிகள் வெளியாகியுள்ளன. அந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? வழக்கு பதிவு செய்வதற்கு என்ன தடை? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பேருந்து மோதியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும். வழக்கு பதிவு செய்து, விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா. இந்த விஷயத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்: பிரச்சாரத்துக்காக தவெக கேட்ட இடத்தைதான் ஒதுக்கினோம். 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதில் இரு நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டன. மற்ற அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டன. அதே இடத்தில்தான் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பிரச்சாரம் செய்துள்ளார். தவெக நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் 559 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு மீது குறை கூறுவது எளிது. இவ்வாறு வாதம் நடந்தது.
















