உயிர் உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டுகோள்

தருமபுரி,நவ.21.-
உயிர் உரங்களை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுங்கள் என விவசாயிகளுக்கு வேளாண்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உயிர் உரங்கள் ஆற்றல் மிக்க, நுண்ணுயிர்களுடைய செயலுள்ள உயிரைக் கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால் விதை அல்லது மண்ணின் வழியாக அளிக்கும் போது பயிர்களுக்கு தேவையான ஊட்டசத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை நுண்ணுயிர்கள் மூலம் எளிதில் எடுத்துக் கொள்கிறது. செயற்கையாக இந்த நுண்ணுயிர்கள் மண்ணில் பெருக்கி நுண்ணுயிர்களின் செயலை அதிகப்படுத்தலாம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைகளிள் உயிர் உரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரசாயன உரங்களுக்கு மாற்றாக நிலையான மேலாண்மையில் உயிர் உரங்களின் விலை குறைவாகவும், ஊட்டச்சத்து புதுபித்தளுக்கான ஆதாரமாகவும் இருக்கிறது. மண்வளத்தை பாதுகாத்து காற்றில் நைட்ரஜன் வாயுவை தழைசத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்கிறது. மண்ணில் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்து பயிர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் மாற்றப்படுகிறது. பயிர் வளர்ச்சி ஊக்கிகளான இன்டேல் அசிட்டிக் அமிலம், ஜிப்ரலின், பையாடின் மற்றும் வைட்டமின் பீ, ஆகியவைகளை நுண்ணுயிர்கள் உற்பத்தி செய்வதால் பயிர்கள் செழித்து வளர வழிவகை செய்கிறது. உயிர் உரங்கள் நோய்களை எதிர்க்கும் சக்தியை மண்ணில் உருவாக்குகிறது. பயிர்களுக்கு வறட்சியைத் தாங்கிடும் சக்தியை அளிக்கிறது. தழைச்சத்து மற்றும் மணிச்சத்து உரங்களை 20 முதல் 25 சதவீதம் வரை சேமிக்கப்படுகிறது. மாசற்ற சுற்றுசூழல் மற்றும் இயற்கை வழி பண்ணையத்தை ஊக்குவிக்கிறது. உயிர் உரங்கள் உபயோகிப்பதனால் அன்னிய செலவை மிச்சப்படுத்துவதோடு, மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்க உதவி புரிகிறது.
பயன்படுத்தம் முறைகள்
600 கிராம் அசோஸ்பைரில்லம் ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து நெல் விதைகளை விதை நேர்த்தி செய்யலாம் .
வேர் குளியல் முறையில்
600 கிராம் உயிர் உரத்தை 5 லீட்டர் தண்ணீருடன் கலந்து நெல் நாற்றுகளை அதில் நனைத்து நடவு செய்யலாம்.
நிலத்திற்கு நேரடியாக
10 கிலோ உயிர் உரத்தை 90 கிலோ தொழு உரத்துடன் கலந்து அடியுரமாக இடலாம்.
பரிந்துரைக்கப்படும் பயிர்களான
அசோஸ்பைரில்லம் நெல் மற்றும் தானியப்பயிர்களாக்கும்
ரைசோபியம் நிலக்கடலை மற்றும் பயறு வகை பயிர்களுக்கும்,
பாஸ்போபாக்டீரியா அனைத்து பயிர்களுக்கும் வழங்கலாம்.
உயிர் உரங்களை நேரடியாக சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது. உர பாக்கெட்டுகளை உலர்ந்த குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். மேலும் உயிர் உரங்களை பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளுடன் கலந்து இடக்கூடாது. எனவே மண்வளம் காத்திட, மகசூல் பெருக்கிட, உரச்செலவைக் குறைத்திட, உயர் விளைச்சல் பெருக்கிட உயிர் உரங்களை விவசாய பெருமக்கள் பயன்படுத்துவீர்கள் என வேளாண்மை உதவி இயக்குநர் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.