உரிமையாளரை கட்டிப்பிடித்து அழுத ஆடு

திருவனந்தபுரம்: ஜூலை 19
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதுண்டு. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உரிமையாளர் ஒருவரை அவர் வளர்த்து வந்த ஆடு கட்டிப்பிடித்து அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆட்டை அதன் உரிமையாளர் விற்பதற்காக சந்தைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அந்த ஆட்டை பலர் விலை பேசுகிறார்கள். ஒருவர் அந்த ஆட்டை விலைக்கு வாங்குகிறார். விற்க வந்தவர், அவரிடம் பணத்தை வாங்கிவிட்டு, ஆட்டை அவரிடம் ஒப்படைக்கிறார். வாங்கியவர், ஆட்டை இழுத்து செல்ல முயல்கிறார்.ஆனால் அந்த ஆடு, வாங்கியவருடன் செல்ல மறுத்து அடம் பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த ஆடு, வாங்கியவரின் கையில் இருந்து திமிறி வெளியேறி, தன்னை வளர்த்த உரிமையாளரின் கைகளில் தஞ்சம் அடைகிறது. அவரை கட்டிப்பிடித்து கொண்ட அந்த ஆடு, உரிமையாளரின் கழுத்தில் முகத்தை புதைத்து கதறி அழுகிறது. ஆறறிவு மனிதனுக்கு மட்டுமே ஏற்படும் இந்த உணர்வு, ஒரு ஆட்டுக்கு ஏற்பட்டிருப்பதை கண்ட மக்கள் கண்கலங்கினர். இப்படியும் ஒரு ஆடு இருக்குமா? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கிடையே ஆட்டை வாங்கிய நபர், ஆட்டின் பரிதாப நிலையை பார்த்து மனம் இரங்கினார். அதனை மீண்டும் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு ஆட்டுக்காக கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி செல்கிறார்.
சந்தைக்கு வந்த சிலர் இக்காட்சிகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.