‘உருதுஸ்தான்’ தனிநாடு கேளுங்கள்: முஸ்லிம்களை தூண்டும் சீக்கிய அமைப்பு

புதுடெல்லி:ஜூன் 14. முஸ்லிம்களிடம் தனி நாடு கோரிக்கையை தூண்டிவிடும் நடவடிக்கைகளில் சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு முகமைகளுக்கு உளவுத் துறை மூலமாக தகவல் கிடைத்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான உளவுத்தகவல்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு கிடைத்து வருகின்றன.நீதிக்கான சீக்கிய பிரிவினைவாத அமைப்பு (எஸ்எஃப்ஜே) காலிஸ்தான் தனிநாடு கோரி ஏற்கெனவே பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், அவர்கள் முஸ்லிம்களையும் தூண்டிவிடும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிடம் உருதுஸ்தான் தனி நாடு கோரிக்கையைமுஸ்லிம்கள் எழுப்ப வேண்டும் என சீக்கிய பிரிவினைவாத குழுக்கள் வலியுறுத்தி வருகின்றன. அதற்கான போராட்டத்தில் இறங்குமாறு முஸ்லிம்களை அவை தூண்டிவிடும் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரை முஸ்லிம்களின் உலகளாவிய விரோதியாக சித்தரித்து இந்த தனிநாடு கோரிக்கையை முன்னெடுக்க செய்வதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பிரிவினைவாத அமைப்புகள் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிலையில் அவர்களின் இந்த நடவடிக்கை கவலையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.