
புதுடெல்லி: பிப்ரவரி 5-
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வம்சாவளி வீரர்கள் பலர் பல்வேறு அணிகளின் சார்பில் பங்கேற்கவுள்ளனர். அதிகபட்சமாக கனடா அணியில் 11 இந்திய வம்சாவளி வீரர்களும், அமெரிக்காவில் 9 பேரும், ஓமனில் 7 பேரும், ஐக்கிய அரபு அணியில் 7 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இதுதவிர நியூஸிலாந்து அணியில் இருவரும், தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய அணிகளில் தலா ஒரு இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த வகையில் மொத்தம் 40 இந்திய வம்சாவளி வீரர்கள் டி 20 உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளனர். முக்கிய இந்திய வம்சாவளி வீரர்கள் குறித்த விவரம்:
சவுரவ் நேத்ரவாக்கர்: மும்பையைச் சேர்ந்த சவுரவ் நேத்ரவாக்கர், அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார். வரும் 7-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணிக்கெதிராக களமிறங்குகிறார் சவுரவ் நேத்ரவாக்கர்.
24 வயதான சவுரவ் நேத்ரவாக்கர், அமெரிக்க அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருக்கிறார். 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்க அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான இவர், 2024-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வீழ்த்தினார். இதன்மூலம் சூப்பர்-8 சுற்றுக்கு அமெரிக்க அணி சென்றது.
சவுரவ் நேத்ரவாக்கர் கூறும்போது, “இந்தியாவுக்கு வந்து தாயக அணிக்கெதிராக விளையாடுவதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இது ஒரு உணர்ச்சிகரமான தருணம். நான் மும்பையில்தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். பின்னர் விளையாட்டை கைவிட்டுவிட்டு அமெரிக்கா சென்றேன்.ஆனால், அங்கு சென்ற பின்னர் மீண்டும் கிரிக்கெட்டில் இணைவேன் என்று எதிர்பார்க்கவில்லை. மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது குறித்து நினைத்துப் பார்க்கவே இல்லை” என்றார். மோனங்க் பட்டேல்: அமெரிக்க அணியின் கேப்டனாக இருக்கும் மோனங்க் படேல், இந்தியாவிலுள்ள ஆனந்த் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் குஜராத்தின் 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியபோது அவருடன் இணைந்து பந்துவீசியவர் இந்திய அணியின் பந்துவீச்சு நட்சத்திரம் ஜஸ்பிரீத் பும்ரா. தற்போது இந்திய அணிக்கெதிராகவே விளையாட வந்துள்ளார் மோனங்க்.இதுகுறித்து மோனங்க் கூறும்போது, “சிவப்பு பந்துகளிலும், வெள்ளைப் பந்துகளிலும் நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். அந்தக் காலம் சிறப்பான காலம் என்று சொல்வேன். அப்போது ஜஸ்பிரீத் பும்ராவுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன்.
அப்போதே கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதிப்போம் என்று நான் தெரிந்து வைத்திருந்தேன்” என்றார்.












