உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடக்கம்

அகமதாபாத்: அக். 5- ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 48 ஆட்டங்கள் 10 நகரங்களில் நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு மோதுகின்றன.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பு இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது. வரும் நவம்பர் 19-ம் தேதி வரை மொத்தம் 46 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, 5முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, இரு முறை பட்டம் வென்றுள்ள இந்தியா, தலா ஒரு முறை வாகைசூடி உள்ள பாகிஸ்தான், இலங்கை, கடந்த இரு முறையும் 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து ஆகிய அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் கலந்துகொள்கின்றன.
போட்டிகள் ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடைபெற உள்ளன. உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவது இது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 1987, 1996 மற்றும் 2011-ம் ஆண்டுகளிலும் இந்தியா உலகக் கோப்பை தொடரை நடத்தி இருந்தது. எனினும் இந்த 3 தொடரையும் இந்தியா அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளுடன் இணைந்து நடத்தி இருந்தது. ஆனால் தற்போது முதன் முறையாக முழுமையாக ஒட்டுமொத்த தொடரையும் இந்தியா நடத்துகிறது.
இந்த கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை போதும். இதில் புள்ளிகள்அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். திருவிழாவின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூஸிலாந்துடன் இன்று பிற்பகல் 2 மணிக்கு மோதுகிறது.
இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறகிறது. இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். கடந்தமுறை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சிறந்த முறையில் தொடங்குவதில் கேன்வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி கவனம் செலுத்தக்கூடும்.
முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர்15-ம் தேதி மும்பையிலும் 2-வது அரையிறுதிப் போட்டி நவம்பர் 16-ல் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளது. நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 8-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
உலகக் கோப்பை தொடரில் கடைசியாக நடைபெற்ற 3 பதிப்புகளிலும் போட்டியை நடத்திய நாடுகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த வகையில் 2011-ம்ஆண்டு இந்தியாவும், 2015-ம் ஆண்டுஆஸ்திரேலியாவும், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தும் வாகை சூடின. இதனால் சொந்த மண் சாதகங்களுடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.