உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடு தீவிரம்

மதுரை, மார்ச் 14- உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவார். இப்போது மதுரையில் மாசி திருவிழா முடிந்து பங்குனி உத்திர திருவிழா தொடங்க உள்ளது. அதற்கு அடுத்தபடியாக வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்க உள்ளது. கொடியேற்றப்பட்ட நாளில் இருந்து தினம் தினம் சாமி ஊர்வலம் வருவதைக் காண மக்கள் மதுரை வீதிகளில் ஒன்று கூடுவார்கள். மதுரை பெண்கள் மல்லிகை மணக்க மணக்க சாமி ஊர்வலத்தை காண வருவதை காண்பதே அழகுதான். மதுரை மீனாட்சி அம்மனுக்கு சொக்கநாதருடன் கல்யாணம். அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம் என்றால் சும்மாவா? ஊரே விழாக்கோலம்தான். முப்பத்து முக்கோடி தேவர்களும் பூத கணங்களும் மதுரைக்கு புறப்பட்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்றார்கள். பார்வதி தேவி மீனாட்சியாக வந்து மதுரையில் பிறந்தது எப்படி? ஈசன் எப்படி மீனாட்சியை சந்தித்தார் ? திருக்கல்யாணம் நடந்தது எப்படி என்பதே சுவாரஸ்யம்தான். மன்னன் மலயத்துவச பாண்டியன் மற்றும் அவன் மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் பிள்ளை பேறு வேண்டி யாகம் செய்தனர். மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழந்தையாகத் தீயிலிருந்து தோன்றினாள். இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும் என்று இறைவன் அருள்வாக்கு கேட்டது. குழந்தைக்குத் தடாதகை எனப் பெயரிடப்பட்டு வளர்ந்தாள். மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை ஆட்சி பொறுப்பேற்று நான்கு திசைகளிலும் திக்விஐயம் செய்து வென்றாள். திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போரிட்டாள். பின் சிவபெருமானைக் கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. இறைவனே தனது கணவன் என அறிந்து நாணம் கொண்டாள். மதுரைக்கு வந்த சிவபெருமான் சுந்தரேஸ்வரராக மாறி மீனாட்சியை திருமணம் புரிந்தார். இந்த புராண நிகழ்வுகள் அனைத்தும் தடாதகைபிராட்டியாரின் திருஅவதாரப் படலம், தடாதகையாரின் திருமணப் படலம் ஆகிய திருவிளையாடல் புராணக் கதைகளில் கூறப்பட்டிருக்கின்றன. சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா.. மார்ச் 13ல் கோவில் நடை திறப்பு..25ல் ஐயப்பனுக்கு ஆராட்டு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாண விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் தினந்தோறும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் எழுந்தருளி அருள்பாலிப்பார். மீனாட்சி அம்மனுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. 20 ஆம் திக் விஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறும். மாசி வீதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.