உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியல்: அதானி உட்பட 15 பேர் இடம்பிடித்தனர்

வாஷிங்டன், மே 18- உலகம் முழுவதும் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி உட்பட 15 பேர் இடம்பிடித்துள்ளனர்.100 பில்லியன் டாலருக்கு மேல்(ரூ.8.33 லட்சம் கோடி) சொத்து மதிப்பு கொண்ட உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2.2 ட்ரில்லியன் டாலர் (ரூ.183.36 லட்சம் கோடி).இது உலகின் முதல் 500 பணக்காரர்களின் சொத்து மதிப்பில் சுமார் 25% ஆகும். கடந்த ஓராண்டில் இந்த 15 பேரின் சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. இந்த15 பேரும் ஏற்கெனவே 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைஎட்டியபோதிலும், அனைவரும் ஒரே நேரத்தில் இந்த அளவு சொத்துமதிப்பை தக்க வைத்திருப்பது இதுதான் முதல் முறை. இந்தப் பட்டியலில் எல்விஎம்எச் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் (75) 222 பில்லியன் டாலருடன் முதலிடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோஸ் (60) 208 பில்லியன் டாலருடன் 2-ம் இடத்திலும், டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் (52) 187 பில்லியன் டாலருடன் 3-ம் இடத்திலும் உள்ளனர்.இந்திய தொழிலதிபரான கவுதம் அதானி (61) இந்த பட்டியலில் மீண்டும் இணைந்துள்ளார். அதானிகுழுமம் வரவு-செலவு கணக்குகளில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து அதானி குழும பங்குகள் மளமளவென சரிந்ததால், இவருடைய சொத்து மதிப்பு சரிந்தது. இதனால் சூப்பர் பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு இப்போது அதானி குழும பங்கு மதிப்பு உயர்ந்துள்ளதால் மீண்டும் இந்தப் பட்டியலில் அதானி இணைந்துள்ளார்.