உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்திய அணி வெற்றி

தோகா, ஜூன்.8-
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்றது.
2022-ம் ஆண்டுக்கான உலக கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 105-வது இடத்தில் உள்ள இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் 184-வது இடத்தில் இருக்கும் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 79-வது மற்றும் கடைசி நிமிடத்தில் கோல் அடித்தார். 7-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். உலக கோப்பை தகுதி சுற்றில் கடந்த 6 ஆண்டுகளில் இந்திய அணி ருசித்த முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணி (6 புள்ளி) 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 15-ந் தேதி ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.