உலக சாதனை நோக்கி இந்தியா

சென்னை, ஆகஸ்ட். 22 – நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் ரஷியாவின் ‘லூனா-25’ திட்டம் தோல்வியில் முடிந்திருக்கிறது. ‘லூனா-25’ விண்கலம் நிலவில் மோதி நொறுங்கிவிட்டது. இதனால் இந்தியாவின் ‘சந்திரயான்-3’ விண்கலத்துக்கு முன்பாக நிலவில் தரையிறங்கும் ரஷியாவின் முயற்சி நிறைவேறவில்லை. ரஷியா தவறவிட்டதை ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் மூலம் சாதித்துக் காட்ட இஸ்ரோ தயாராகி வருகிறது.
இந்த நிலையில் நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணிக்கு நிலவில் இறங்கும், ‘சந்திரயான்-3’-ல் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ நிலை மற்றும் தயார்நிலை குறித்து மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கிடம் இஸ்ரோ தலைவர் சோமநாத் விளக்கம் அளித்தார். அடுத்த 2 நாட்களுக்கு ‘சந்திரயான்-3’-ன் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நிலவு வட்டப்பாதையில் சுற்றிவரும் ரோவர், லேண்டரின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. லேண்டர், அபாயத்தைக் கண்டறிதல் மற்றும் தவிர்ப்பு கேமரா மூலம் நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
மேலும் ‘விக்ரம் லேண்டர்’, ‘சந்திரயான்-2’ விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ உடன் இருவழி தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. லேண்டரை வரவேற்கும் விதமாக அதற்கு, ‘வருக, நண்பா!’ என்ற செய்தியை ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.
ஆர்பிட்டர் உடன் மட்டுமல்லாது, பெங்களூரு அருகே பயலாலுவில் உள்ள இஸ்ரோவின் இந்திய ஆழ் விண்வெளி நெட்ஒர்க் அமைப்புடனும், ரோவருடனும் தொடர்பு கொள்ளும் திறனை ‘விக்ரம் லேண்டர்’ கொண்டிருக்கிறது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று தெரிவித்தனர். நேரலையில் நிலவு காட்சிகள் ‘சந்திரயான்-3’-ன் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவது தொடர்பாக இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்வகையில், லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரலையில் காணலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணி முதல் நேரலை ஒளிபரப்பு தொடங்கிவிடும். இஸ்ரோ இணையதளம் மற்றும் டிடி நேசனல் டிவி. சேனல் உள்ளிட்டவற்றில் இது நேரலையாக ஒளிபரப்பப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அவ்வாறு விழும்போது, நொடிக்கு 2 மீட்டர் வேகத்தில் லேண்டர் கருவி விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணக்கு சற்று தவறி, நொடிக்கு 3 மீட்டர் வேகத்தில் கீழே விழுந்தாலும் அதையும் தாங்கும் அளவுக்கு லேண்டர் கருவியின் கால்கள் பலமாக அமைக்கப்பட்டுள்ளன. நிலவில் பத்திரமாக லேண்டர் கருவி தரையிறங்கிய பிறகு, அடுத்த 2 மணி நேரத்துக்கு எந்த செயல்பாடும் நடக்காது. ஏனென்றால், சற்று மண் துகள்கள் புழுதியாக எழுந்தாலும், அந்த 2 மணி நேரத்தில் அது அடங்கி, மீண்டும் அமைதியான சூழல் அங்கு ஏற்படுத்தப்படும். ரோவர் இறங்கும் அதன்பிறகு, லேண்டர் கருவியில் உள்ளே உள்ள ரோவர் கருவி வெளியே கொண்டுவரும் பணி தொடங்கும். இதுதான் 8-வது கட்டம். முதலில், லேண்டர் கருவியில் இருந்து சாய்வு பாதை திறந்து நிலவின் தரைப்பகுதியை தொடும். அந்தப் பாதை வழியாக ரோவர் கருவி நிலவின் தரைப் பகுதிக்கு மெதுவாக ஊர்ந்து வரும். முதலில், தான் வந்த பாதையை பின்நோக்கி திரும்பி, அதாவது லேண்டர் கருவியை ரோவர் கருவி படம் எடுக்கும். அதேபோல், லேண்டர் கருவியில் உள்ள கேமரா ரோவர் கருவியை படம் எடுக்கும். ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியையும், அந்த படங்களையும் காண இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது. 14 நாட்கள் ஆய்வுப் பணி அதன்பிறகு, ரோவர் கருவி நிலவின் தரைப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். அது தொடர்பான புகைப்படங்களையும் உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும். பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும். அதை கருத்தில் கொண்டுதான், பகல் தொடங்கும் முதல் நாளில் லேண்டர் கருவியை நாம் தரையிறக்குகிறோம். அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை வாங்கிக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும். ரோவர் கருவியும் இடைவிடாமல் உற்சாகமாக தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். அனைத்து ஆய்வுகளையும், நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.