உலக பாரம்பரிய பட்டியலில் ஹொய்சாலா கோவில்கள் – பிரதமர், முதல்வர் பெருமிதம்

பெங்களூரு, செப். 19: கர்நாடகத்தின் வளமான கலை மற்றும் கட்டிடக்கலை கொண்ட ஹொய்சளா கோவில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கு பிரதமர் மோடி, முதல்வர் சித்தராமையா பெருமிதம், வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தனது வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “ஹொய்சளர்களின் அற்புதமான மற்றும் புனிதமான சிற்ப வளாகங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஹொய்சளா கோவில்களின் காலத்தால் அழியாத அழகு மற்றும் நுட்பமான கைவினைத்திறன் இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்திற்கும், நமது முன்னோர்களின் அசாதாரண சிற்பத் திறமைக்கும் சான்றாகும்” என்று அவர் சமூக ஊடகத்தில் தனது மகிழ்ச்சியை பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளதாவது, இது மகிழ்ச்சி மற்றும் பெருமிதக் கொள்ள செய்யும் செய்தியாகும். மாநிலத்தில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உலக தரத்திலான‌ வசதி, பாதுகாப்பை செய்து தர அரசு திட்டமிட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், ஆன்மீகச் சுற்றுலாவிற்கு உகந்த மாநிலமாக கர்நாடக விளங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள‌ 5 இடங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளன. ஹம்பி, பட்டடகல்லு-பாதாமி-இஹோலே, பிதார்-பிஜப்பூர்-குல்பர்காவின் நினைவுச்சின்னங்கள், ஸ்ரீரங்கப்பட்டினத்தின் நினைவுச்சின்னங்கள், பேலூர் மற்றும் ஹலேபீடு ஆகியவை யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களாகும்.பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், ஹலேபீடுவில் உள்ள ஹொய்சளா கோயில்கள், மைசூரில் உள்ள சோமநாதபுராவில் உள்ள கோயில்கள் இந்த பெருமையைப் பெற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் 42 இடங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. யுனெஸ்கோவின் இந்திய பிரதிநிதி விஷால் சர்மா திங்கள்கிழமை ஹொய்சளர்களின் கோயில்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.