
போபால்: நவ. 9
3-வது முறையாக பிரதமர் பதவி வகிக்கும் காலத்தில் இந்தியா உலகளாவிய பொருளாதாரத்தில் 3-வது இடத்தைப் பிடிக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது இந்த நிலையில், தாமோ நகரில் நேற்றுநடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் ஆட்சியை மக்கள் காங்கிரஸிடம் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் மக்களின் நலனை மறந்துவிட்டு, பந்தய செயலி, கருப்பு பணத்தை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஆனால், பாஜகவை பொருத்தவரை நாட்டின் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளவில்10-வது இடத்தில் இருந்த இந்தியப்பொருளாதாரம் 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதற்குப் பிறகு 5-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் நம்மை 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி வளர்ச்சியில் இந்தியா இந்த இடத்தை பிடித்துள்ளது.
இது நம் அனைவரது பெருமை.
முன்பு புறக்கணித்த உலக நாடுகள் அனைத்தும் இந்த புள்ளியிலிருந்துதான் இந்தியாவை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி யுள்ளன.
இந்த சூழ்நிலையில், மூன்றாவது முறையாக நான் பிரதமர் பதவியேற்று மக்களுக்கு சேவையாற்றும் காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும்.
ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு ரூபாயில் 15 பைசாமட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறுவார்.
அது முற்றிலும் உண்மை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ராஜீவ் காந்தி கூறியது போல மாநிலங்களில் 85 சதவீத கமிஷனை அக்கட்சி செயல்படுத்தும். எனவே மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்திடம் புகார்: ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டத்தை 5 ஆண்டு களுக்கு நீட்டிப்பதாக நாங்கள் கூறினால், அது குறித்து தேர்தல்ஆணையத்திடம் புகார் செய்வோம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
இது, அவர்களுக்கு ஏழைகள் மீது அக்கறையில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த பாவத்தை அவர்கள் செய்யட்டும். நான் மக்களுக்கு நல்ல பணிகளை மட்டுமே தொடர்ந்து செய்வேன். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.