உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று: முதல்வர் ஸ்டாலின்

சென்னை, அக். 13- ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்றதை அடுத்து, உள்ளாட்சி தேர்தல் வெற்றி ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகிறது தி.மு.க., அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தி.மு.க., அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரமாகவும் வெற்றி அமைந்துள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி என செய்தி வருவது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று.
மருத்துவ நெருக்கடி, பொருளாதார நெருக்கடி என இக்கட்டான காலத்தில் தி.மு.க அரசு அமைந்தது. நிற்க நேரமில்லை என்கிற அளவுக்கு நானும், அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் உழைத்தோம். சட்டசபை தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட 5 மாத காலத்தில் தி.மு.க.,வுக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது. 5 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை 5 மாதத்தில் செய்ததால் கிடைத்த வெற்றி இது. மக்கள் தொண்டே நமது செயல்பாடு என கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும். நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகள் உழைக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.