உ.பி. அரசு தேர்வில் நூதன முறையில் முறைகேடு; 21 பேர் கைது

லக்னோ, ஆக. 1- உத்தர பிரதேசத்தில் தலைநகர் லக்னோ உள்பட 12 மாவட்டங்களில் துணை நிலை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் கிளார்க் அளவிலான பதவிகளுக்கு நேற்று தேர்வு நடந்தது. 501 மையங்களில் நடந்த தேர்வில் 2.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்த அரசு தேர்வில் பங்கேற்றவர்களில் சிலர் நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதன்படி, தேர்வில் பங்கேற்றோர் புளூடூத் உபகரணம் உதவியுடன் விடைகளை பெற்றுள்ளனர். தேர்வு மையத்திற்கு வெளியே நரேந்திர குமார் பட்டேல் மற்றும் சந்தீப் பட்டேல் ஆகிய இருவர் காரில் அமர்ந்து கொண்டு விடைகளை அளித்து வந்துள்ளனர். பிரயாக்ராஜில் நடந்த இந்த சம்பவத்தில் முதலில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, இதில் ஒரு கும்பலே ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, தலைநகர் லக்னோ, வாரணாசி, கான்பூர், மொராதாபாத், கொண்டா மற்றும் பரேலி ஆகிய 6 மாவட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.