உ.பி போக்குவரத்து கழகத்தில் புதிய மாற்றம்

லக்னோ: அக்.24-
உத்தரப் பிரதேசத்தில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் 51 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் பேருந்து சேவையை அவர் தொடங்கி வைத்திருக்கிறார்.
யோகி ஆதித்யநாத், கடந்த இரு நாட்களாக அவர் அயோத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை புதியதாக தொடங்கி வைத்துள்ளார். அதேபோல முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்நிலையில், நேற்று அயோத்தியின் ராம் கதா பூங்காவில் இருந்து “மிஷன் மகிளா சாரதி” எனும் பெண்கள் மட்டுமே இயக்கும் 51 பேருந்துகளை அவர் தொடங்கி வைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு சமூகத்தின் அனைத்து விதமான வளர்ச்சிக்கும் பெண்களின் முன்னேற்றம் முக்கியம், பெண்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.