உ.பி. மருத்துவமனையில் இரு மகள்களுக்கு திருமணம்

லக்னோ, ஜூன் 18. உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ஜுனைத் இக்பால் (55). இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் தார்கா சையத் (26), இளைய மகள் டான்சிலா சையத் (24) ஆகியோருக்கு மும்பையில் ஜூன் 22-ம் தேதி திருமணம் நடத்த ஜுனைத் இக்பால் ஏற்பாடு செய்திருந்தார். இந்த சூழலில் கடந்த 8-ம் தேதி அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் லக்னோவில் உள்ள இராஸ் லக்னோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். எனவே தனது உயிர் பிரிவதற்கு முன்பு இரு மகள்களின் திருமணத்தையும் நேரில் பார்க்க வேண்டும் என்று ஜுனைத் இக்பால் விரும்பினார். அவரது மகள்களும் இதே விருப்பத்தை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் முறையிட்டனர். மனிதாபிமான அடிப்படையில் அவசர சிகிச்சைப் பிரிவில் திருமணத்தை நடத்த மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன்படி கடந்த 13-ம் தேதி ஜூனைத் இக்பால் படுக்கைக்கு அருகே இரு மகள்களின் திருமணம் நடைபெற்றது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்து ஜுனைத் இக்பாலின் மகள்கள் தார்கா சையத், டான்சிலா சையத் கூறியதாவது: எங்கள் தந்தையே எங்கள் உலகம். அவரது ஆசி இல்லாமல் திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. எனவே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் முஸ்லிம் முறைப்படி திருமண சடங்குகளை நடத்த மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி கோரினோம். மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு அனுமதி கிடைத்தது. எங்கள் தந்தை சுயநினைவுடன் இருக்கும் போது அவரது முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அவரது கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றினோம். அவசர சிகிச்சை பிரிவில் இதர நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாங்கள், மணமகன்கள், மதபோதகர் என 5 பேர் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டோம். எங்களோடு மருத்துவர்கள், செவிலியர்களும் உடன் இருந்தனர். இவ்வாறு தார்கா சையத், டான்சிலா சையத் தெரிவித்தனர்.