உ.பி முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு? – மாயாவதி கட்சியால் காங்., அகிலேஷுக்கு இழப்பு

புதுடெல்லி, ஏப். 17-
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 75 மாவட்டங்களில் சுமார் 20-ல் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. சராசரியாக சுமார் 22 சதவீதம் முஸ்லிம்கள் உ.பி.யில் உள்ளனர்.
முராதாபாத், ராம்பூரில் முஸ்லிம் வாக்குகள் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகம். ராம்பூர், பிஜ்னோர், முசாபர்நகர், சஹரான்பூர், அம்ரோஹா, பிஜ்னோர், அலிகர் மற்றும் மீரட் ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம் வாக்குகள் சுமார் 40 சதவீதம் உள்ளன. மேலும், 15 மாவட்டங்களில் கணிசமாக உள்ள முஸ்லிம் வாக்குகள் அதன் வேட்பாளர்கள் வெற்றியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டம் காரணமாக, பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்தனர்.இந்தமுறை பொது சிவில் சட்டம், சிஏஏ சட்டம், கர்நாடகா பர்தா தடை விவகாரம், உத்தராகண்ட் மற்றும் டெல்லியின் மதக்கலவரம் உள்ளிட்ட சிலவற்றால் அவர்களை யோசிக்க வைத்துள்ளது. எனவே, இம்முறை முஸ்லிம்களின் மொத்த வாக்குகள் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், இவர்களது லாபத்துக்கான பங்கில் பிஎஸ்பியின் தலைவர் மாயாவதி இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மாயாவதி 11 முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதுவரை 42 வேட்பாளர்கள் பெயரை அறிவித்தவர் மீதம் உள்ளவற்றிலும் முஸ்லிம்களை சேர்க்கும் வாய்ப்புகள் உள்ளன. முஸ்லிம்களில் இதுவரை சமாஜ்வாதி 3, காங்கிரஸ் 2 வேட்பாளர்களை மட்டும் அறிவித்துள்ளன. இதன் காரணமாக, பிஎஸ்பியின் முஸ்லிம் வேட்பாளர்கள் தம் சமுதாய வாக்குகளை பெறும் சூழல்உள்ளது. இவர்களால் உறுதியாக வெல்லமுடியாத நிலை இருப்பதால், அதனால், பிரியும் வாக்குகள் பாஜக வேட்பாளர்களுக்கு சாதகமாகும். சமாஜ்வாதியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் மக்களவைத் தொகுதியான வாராணசியிலும், பிஎஸ்பி ஒரு முஸ்லிம் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் அங்குள்ள கியான்வாபி மசூதியில் நடைபெற்ற களஆய்வு, முஸ்லிம்கள் இடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அவர்கள் வாக்குகளை பிஎஸ்பியின் முஸ்லிம் வேட்பாளர் பிரிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஏற்கெனவே உறுதியான வெற்றி பெறும்வேட்பாளரான பிரதமர் மோடி, இதனால்,
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வாய்ப்புகள் உள்ளன. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூர் தொகுதியிலும் இந்தமுறை முஸ்லிம் வேட்பாளர் பிஎஸ்பி சார்பில் போட்டியிடுகிறார். இது, அந்த தொகுதியின் பாஜக எம்பியான வேட்பாளர் ரவி கிஷணுக்கு சாதகமாகி விட்டது.
மாயாவதி அல்லாமல் ஐதராபாத் எம்.பி.யான அசதுத்தீன் உவைசியும் இந்தமுறை அப்னா தளம் (கமர்வாதி) கட்சியுடன் கூட்டணி அமைத்து உ.பி.யில் களம் இறங்கியுள்ளார். இந்த கூட்டணியாலும் முஸ்லிம் வாக்குகள் உ.பி.யில் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.