உ.பி.யில் பீரங்கி குண்டுகள் தயாராகின்றன: அமித் ஷா பெருமிதம்

லலித்பூர்:மே, 20- ஒரு காலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்ட உ.பியில் இன்று பீரங்கி குண்டுகள் தயாராகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மக்களவைத் தொகுதியில் பாஜக எம்.பி. அனுராக் சர்மா இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து லலித்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகவும் யோகி ஆதித்யநாத் உ.பி. முதல்வராகவும் ஆன பிறகுதான் உ.பி. வளர்ச்சி அடையத் தொடங்கியது. உ.பி.யில் ஒரு காலத்தில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டன. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, புந்தேல்கண்ட் பகுதியில் ராணுவ தளவாட வழித்தடம் உருவாக்கினார். இப்போது இங்கு பீரங்கி குண்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்தால், புந்தேல்கண்ட் பகுதியில் தயாரிக்கப்பட்ட பீரங்கி குண்டு அந்நாட்டை அழிக்க பயன்படுத்தப்படும்.
நாங்கள் பயப்படமாட்டோம்: பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பதால் அந்நாடு மதிக்கப்பட வேண்டும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் திரும்ப கேட்கக் கூடாது என காங்கிரஸை சேர்ந்த மணிசங்கர் அய்யர் கூறுகிறார். ஆனால் இது மோடியின் அரசு. எந்த அணு ஆயுதத்திற்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை நாங்கள் மீட்போம்.இவ்வாறு அமித் ஷா பேசினார்.