உ.பி.யில் ரயில் விபத்து2 பெட்டிகள் தடம் புரண்டன

லக்னோ : நவ.1-ஆந்திராவில் ரயில் விபத்தில் 19 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், உத்தரப் பிரதேசத்தில் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூரில் இருந்து டெல்லி ஆனந்த்நகர் வரை செல்லும் சுஹைல்தேவ் விரைவு ரயில், பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. ரயில் மெதுவாக சென்றதாலும் அத்தடத்தில், வேறு ரயில்கள் இயக்கப்படாததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 2 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நகர்த்தி ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். நாடு முழுவதும் அடுத்தடுத்து நிகழும் ரயில் விபத்துகள் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாக்ஸர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ம் தேதி 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த விபத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்த நிலையில், 1000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து ஆந்திராவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 2 ரயில்கள் மோதிய விபத்தில், 14 பேர் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் உத்தரப் பிரதேசத்தில் விரைவு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.