உ.பி.யில் ராகுல், பிரியங்கா போட்டியா, இல்லையா

புதுடெல்லி, மார்ச் 19- ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் உத்தரபிரதேசத்தில் நேரு-காந்தி குடும்பத்தினர் தொடர்ந்து போட்டியிட்டு வருகின்றனர்.
கடைசியாக 2019 தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் இந்தமுறை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். உ.பி.யில் சமாஜ்வாதியுடன் தொகுதிப் பங்கீட்டை காங்கிரஸ் இறுதி செய்துள்ளது. இதில் காங்கிரஸுக்கு அமேதியுடன், ரேபரேலியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால், ரேபரேலியில் சோனியாவுக்கு பதிலாக பிரியங்கா வதேரா போட்டியிடுவார் எனப் பேசப்பட்டது.
ராகுல் மீண்டும் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. 2004 முதல் 3 முறை அமேதி எம்.பி.யான ராகுல், கடந்த தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
அவர் இந்தமுறையும் இரண்டாவது தொகுதியாக அமேதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது.
ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு பிறகும் இது முடிவாகாமல் உள்ளது.இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் காங்கிரஸ் தேசிய வட்டாரங்கள் கூறும்போது, “பிரச்சாரத்துக்கு பிரியங்காவை காங்கிரஸ் நம்பியுள்ளது. ராகுலையும் நாடு முழுவதிலும் நட்சத்திரப் பிரச்சாரகராக கட்சி முன்னிறுத்துகிறது. ரேபரேலியில் போட்டியிட்டால் நாடு முழுவதும் கவனம் செலுத்த முடியாமல் போகும் என பிரியங்கா தயங்குகிறார். இதேபோல், ராகுலும் அமேதியில் உறுதியாக வெற்றி கிடைக்குமா என யோசிக்கிறார்” என்று தெரிவித்தனர். உ.பி.யிலிருந்து நேரு-காந்தி குடும்பத்தினர் விலகினால் அதன் தாக்கம் நாடு முழுவதிலும் எதிரொலிக்கும் வாய்ப்புகள் உள்ளன.