ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக் 93 வயதில் 5-வது திருமணம்

நியூயார்க், ஜூன் 3- பிரபல ஊடக நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டோக், தனது 93-வது வயதில் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வெளியிட்டிருந்தார். அவரது காதலியான 67 வயதான எலெனா ஜோகோவாவை அவர் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. எலெனா, ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். தற்போது அமெரிக்க நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். அவர் உயிரியல் துறை வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ரஷ்ய நாட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் அலெக்சாண்டரின் முன்னாள் மனைவி. ரூபர்ட் முர்டோக்குக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். 1985-ல் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
கடந்த 1956-ல் அவருக்கு முதல் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு 1967, 1999 மற்றும் 2016-ல் அடுத்தடுத்த திருமணங்களை செய்து கொண்டார். அது அனைத்தும் விவாகரத்தில் விடை பெற்றது. இந்த சூழலில் எலெனாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் கார்ப்பரேஷன் உட்பட பல்வேறு ஊடக நிறுவனங்களை நிறுவியவர். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 19.9 பில்லியன் டாலர்களாகும். இந்த தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.