ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்

சென்னை: ஏப்.30- ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு வரும் மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகினர்.
அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சிறப்பு அரசு வழக்கறிஞர் டி.சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் கூறப்பட்டிருந்ததாவது:
ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி, பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
வாகனங்கள், வசதிகள்: தற்போது ஊட்டிக்கு தினமும்சீசன் நேரங்களில் கார், வேன் உட்பட மொத்தம் 20,011 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2,002 வாகனங்களும் வருகின்றன. சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5,620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் உள்ளன. தவிர 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்தும் இடங்களும் உள்ளன.
இதேபோல, கொடைக்கானலில் சீசன் நேரங்களில் 5,135 வாகனங்களும், சீசன் இல்லாத நேரங்களில் 2,100 வாகனங்களும் வருகின்றன. கொடைக்கானலில் 13,700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3,325 அறைகள் உள்ளன. கொடைக்கானலில் வாகன நிறுத்தும் இடங்கள்தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. லேக்ஏரியா பகுதியில்ஒரு நிரந்தர வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி மற்றும் வட்டக்கானல் பகுதிகளில் 4 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதை படித்துப் பார்த்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:
சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்: ஊட்டி, கொடைக்கானலுக்கு இவ்வளவு வாகனங்கள் சென்றால் உள்ளூர் மக்களின் நிலைமை என்ன ஆவது. இதனால், சுற்றுச்சூழல் மட்டுமின்றி வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.