ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள்

கோவை: மார்ச் 20- வட மாநில தொழிலாளர்கள் பலர் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் ஒரு ஷிப்ட் மட்டுமே பணி நடப்பதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.
கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் ஹோலி பண்டிகையின் போது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்தாண்டு வரும் 24-ம் தேதி ஹோலி பண்டிகை வருவதாலும், மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் பலர் குழுக்களாக கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். இதனால் தொழில் நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இது குறித்து ‘காட்மா’ அமைப்பின் தலைவர் சிவக்குமார், ‘காஸ்மாபேன்’ தலைவர் சிவ சண்முக குமார், ‘கொசிமா’ முன்னாள் தலைவர் சுருளி வேல் ஆகியோர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உற்பத்திப்பிரிவின் கீழ் உள்ள எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் குறைந்துள்ளன. இதனால் வட மாநில தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றும் அரசூரில் உள்ள பவுண்டரி தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தினமும் மாலை 5 மணிக்கு பெரும்பாலான நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன.
வழக்கமாக இப்பகுதிகளில் பகல், இரவு தொடர்ந்து 24 மணி நேரமும் உற்பத்தி நடப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு ஷிப்ட் மட்டுமே செயல் படுகிறது. பம்ப்செட் தேவைக்கான பணி ஆணைகள் நிலையாக உள்ளன. இருப்பினும் மற்ற துறைகளில் நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் பணி ஆணைகள் குறைந்துள்ளன. இதனால் வட மாநில தொழிலாளர்கள் பலர் குழுக்களாக சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு சென்றால் ஒரு மாத விடுமுறைக்கு பின் தான் கோவை திரும்புவார்கள்.