
கொல்கத்தா:அக்.27-
மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை ஊழல் விவாகரம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்தது அமலாக்கத்துறை. நேற்று காலை முதல் அவரது வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மாநிலத்தில் ஆட்சி புரிந்து வரும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வனத்துறை அமைச்சராக ஜோதிப்ரியா மல்லிக் இயங்கி வருகிறார். இவர் உணவுத்துறை அமைச்சராக பணியாற்றிய போது ரேஷன் விநியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சட்ட விரோத பண பரிவர்த்தனை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை.
அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை (வியாழன்) அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கிற்கு சொந்தமான 2 வீடு மற்றும் அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. முன்னதாக, அமைச்சருக்கு நெருக்கமான ஒருவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக்கை இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்தது. “மிகப் பெரிய சதித் திட்டத்துக்கு பலிகடாவாக்க பட்டுள்ளேன்” என கைது நடவடிக்கையின் போது அமைச்சர் தெரிவித்தார்.