ஊழல் வழக்கு: லாலு முன்னாள் உதவியாளர் கைது

புதுடெல்லி, ஜூலை. 28 – ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 2004 முதல் 2009 வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயில் பணிகளை வழங்குவதற்காக பீகாரை சேர்ந்த ஏராளமானோரிடம் இருந்து நிலத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அந்தவகையில் 1.05 லட்சம் சதுர அடி நிலம் லாலு பிரசாத்தின் குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து உள்ளது. மேலும் லாலு பிரசாத் யாதவிடம் அப்போது நேர்முக உதவியாளராக இருந்த போலா யாதவ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் போலா யாதவை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் இந்த நடைமுறை மூலம் பணி நியமனம் பெற்ற ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இந்த விவகாரத்தில் பாட்னா மற்றும் தர்பங்காவில் நேற்று 4 இடங்களில் அதிகாரிகள் சோதனையும் மேற்கொண்டன.