ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு

சென்னை: மே 30- தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில், 15-வது ஊதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு தொடங்கியது. இதில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்றது.
30 சங்கங்கள் வெளிநடப்பு: போக்குவரத்துத் துறை செயலாளர் க.பணீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட 8 மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், தொமுச, சிஐடியு உள்ளிட்ட 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், 2023-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் ஒப்பந்தம் அமலானாலும், 2024-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதலே ஊதிய உயர்வுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சங்கங்கள் வெளிநடப்பு செய்தன. மீதமுள்ள தொமுச உள்ளிட்ட சங்கங்கள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது:அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதத்தை உயர்த்தி, கடந்த செப்.1-ம் தேதிமுதல் நிலுவைத் தொகை காலாண்டு தவணையாக வழங்கப்படும். அதன்படி, ரூ.1420-6,460 ஊதிய உயர்வு கிடைக்கும். இதில் நிலுவைத் தொகை வழங்க ரூ.319.50 கோடியும், மாதம் தோறும் ரூ.40.26 கோடியும் கழகங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
குறைந்தபட்சத் தொகை ரூ.6-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்படும். இதேபோல் இரவு தங்கல்படி, தையற்கூலி, திருமணக்கடன், பண்டிகை முன்பணம் உள்ளிட்டவை உயர்த்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.