கோவை: செப். 22-
பெங்களூரு-கோவை இடையே இயக்கப்படும் உதய் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 22665) இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. அதேபோல் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவை-பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ளது. கூடுதல் பெட்டி இணைப்பால் கோவை, பெங்களூர் இடையே செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கோவையில் இருந்து பெங்களூர் நகருக்கு ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் அதிகாலை 5.45 மணிக்கு உதய் எக்ஸ்பிரஸ் என்ற இரட்டை அடுக்கு (டபுள் டக்கர்) ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மதியம் 12.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும். அதேபோல் கேஎஸ்ஆர் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிறு தவிர அனைத்து நாட்களிலும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் உதய் எக்ஸ்பிரஸ் இரவு 9.15க்கு கோவை வந்துவிடும்.
ஒரே நாளில் கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் சென்று, அன்று இரவே கோவை திரும்புவதால் உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு அதிகம் ஆகும். ஏனெனில் கட்டணமும் மிக குறைவு. இந்த ரயிலில் இதில் 5 இரட்டை அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 5 சாதாரண பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினர், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மற்றும் பலர் இந்த ரயிலை தினமும் பயன்படுத்தி வருகிறார்கள்.














