எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து 4 பேர் பலி 100 பேர் காயம்

பக்ஸர்(பிஹார்): அக்டோபர் . 12 டெல்லி – காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் பிஹாரில் தடம் புரண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 75 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து அஸ்ஸாமின் காமாக்யா நோக்கி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு 9.35 மணி அளவில் பிஹாரின் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்துக்கு அருகே தடம் புரண்டது. ரயிலின் 21 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இந்த விபத்தை அடுத்து பெட்டிகள் குறுக்கும் நெடுக்குமாக உள்ளன.
இந்த ரயில் விபத்தை அடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே, இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். அங்கிருந்த அதிகாரிகள் விபத்து தொடர்பான தகவல்களை அவருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி சவுபே, இந்த ரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 70-75 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தை அடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நேற்றிரவு மட்டுமே இரண்டு முறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.
சம்பவ இடத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். மிகவும் கோரமாக உள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர் மக்கள் ஆயிரக்கணக்கில் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு உதவி உள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விபத்து குறித்த தகவல் எனக்கு கிடைத்ததும் ரயில்வே அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிவித்தேன். மீட்புப் பணிகள் துரிதமாக தொடங்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். காயமடைந்தவர்களுக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை. விபத்து நிகழ்ந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விபத்துக்கான காரணம் குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.