‘எச்சரிக்கை’யை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

டெல் அவிவ்:ஏப். 13: “சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விரைவில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்” என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ள
நிலையில் காசா மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து துளைத்தெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசாவில் வான்வழி, தரைவழி என அனைத்து வழிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸை அழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகமும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது.
முன்னதாக கடந்த புதன்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிடுகிறது. வெகு விரைவில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்.
இந்த வேளையில் போர் வேண்டாம் என்று நான் ஈரானை வலியுறுத்துகிறேன். ஈரான் வெற்றிபெற இயலாது.எந்தச் சூழலிலும் இஸ்ரேலுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம்.” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மத்திய காசாவில் இஸ்ரேல் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ளன. ஏற்கெனவே உக்ரைன் – ரஷ்யா, இஸ்ரேல் – காசா என போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் ஈரான் – இஸ்ரேல் போர் மூளக்கூடாது எனப் பல்வேறு உலக நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.