எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

சென்னை: ஏப். 24: மக்களவை தேர்தல், சசிகலா கடிதம் குறித்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். சசிகலா வெளியிட்ட படிவம் குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார் அவரே ஒரு வெற்றுக் காகிதம் என விமர்சித்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்.19-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம்,எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
வாக்குப்பதிவு முடிந்த நிலையில், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், நிர்வாகிகள், விருகை ரவி, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, வெங்கடேஷ்பாபு, ராஜேஷ், வேளச்சேரி அசோக், கந்தன், அதிமுக வேட்பாளர்கள் ஜெயவர்தன், ராயபுரம் மனோ, பிரேம்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
முதல் கட்டமாக தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்தும், தேர்தலின்போது கூட்டணி கட்சியினர், அதிமுகவினர் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் கால அவகாசம் இருப்பதால், மிகவும் கண்காணிப்புடன் இருக்கும்படி கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
மேலும், தேர்தலின்போது ஒதுங்கியிருந்த சசிகலா, சமீபத்தில் 15 கேள்விகள் அடங்கிய படிவத்தை வெளியிட்டு, அதை அதிமுகவினர் நிரப்பி தரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தபடிவம் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு பழனிசாமி புறப்பட்டுச்சென்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் வாக்காளர்கள் 100 சதவீதம் ஜனநாயக கடமையை ஆற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஆணையம் இதை கண்டு கொள்ளவில்லை. இதனால் பலரது வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இல்லை.