எடியூரப்பாவின் கட்டுப்பாட்டில் மீண்டும் கர்நாடக பிஜேபி

பெங்களூரு, நவ.16: கர்நாடக மாநில பாஜக மீண்டும் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
குடும்ப அரசியல் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு ஜனநாயகத்துக்குக் கொடியது. குடும்ப அரசியலை வேரோடு அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பிரதமர் நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசினார். பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தும், பல ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவில்லை என்றும், விரைவில் அதிகாரமளிக்க குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்த நிலையில், கர்நாடக மாநில பாஜகவிற்கு எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பொதுக்கூட்டங்களில் மோடி பேசுவதற்கும், உண்மையில் அவர் செய்வதற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதையே இது காட்டுகிறது. குடும்ப‌ அரசியலை எதிர்க்கும் மோடி, பி.எஸ்.எடியூரப்பாவின் இளைய மகன் பி.ஒய்.விஜயேந்திராவுக்கு பாஜக.வின் தலைமைப் பொறுப்பை வழங்கியதால், மோடியை ‘தெய்வீக ரூபத்தில்’ பார்க்கும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வாயடைத்துப் போயிள்ள‌னர்.எடியூரப்பா நடமாடும்போதே விஜயேந்திராவைக் கரையேற்ற வேண்டும் என்ற ஆசை வெற்றி பெற்றுள்ளது. ‘மோடியின் பெயரால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த அக்கட்சியின் தலைவர்கள், எடியூரப்பாவிடம் முழுமையாக சரணடைந்துள்ளனர். தேசியத் தலைவர்களை நம்பிய காலம் முடிவடைந்து, பிராந்தியத் தலைமைக்கு இடம் கொடுப்பது அவசியம் என்பதையும் இந்த வளர்ச்சி தெளிவாகக் காட்டுகிறது.2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே, எடியூரப்பாவை தோற்கடிக்க பாஜகவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இதன் பின்னணியில் கட்சியை தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற தீவிர ஆசையில் இருந்த தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் தலையீடு அதிகம் என்பது ரகசியமல்ல. எடியூரப்பாவுக்கு எதிராககே.எஸ்.ஈஸ்வரப்பா தலைமையில் சங்கொல்லி ராயண்ணா படை அமைக்கப்பட்டது.அந்தத் தேர்தல் முடிவுகள் வந்தபோது பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எடியூரப்பாவின் செல்வாக்கும் எதையும் செய்ய முடியவில்லை. ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரஸ், மஜத‌ எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வைத்து, 2019ல் எடியூரப்பா முதல்வர் பதவியேற்க வழி வகுத்தது. அப்போது ஆபரேஷன் தாமரைக்கு விஜயேந்திரா பொறுப்பேற்றார். எடியூரப்பா பாஜகவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை உருவாக்கினாலும், நான்கைந்து நாட்கள் வரை எடியூரப்பாவி முதல்வர் பதவியேற்க மோடி-ஷா சம்மதிக்கவில்லை. இதனாலும் மனம் தளராத எடியூரப்பா, ஆளுநர் மாளிக்கைக்கு செய்தி அனுப்பினார். தங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பில்லை என்று கோபத்தில் இருந்த மோடி‍ஷா ஜோடி, அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உடன்பட‌வில்லை.
எடியூரப்பா ஒரு மாத காலம் தனித்து ஆட்சி நடத்தினார். அதன் பிறகும் கர்நாடகாவுக்கு தேவையான ஒத்துழைப்பை மத்திய அரசு அளிக்கவில்லை. எடியூரப்பா, மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்தும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அவர்களை சமாதானம் செய்த எடியூரப்பா அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்.இரண்டாண்டுகள் முடிவதற்குள், எடியூரப்பாவை நாற்காலியில் இருந்து அகற்றும் பணி தொடங்கியது. அப்போதும் எடியூரப்பாவுக்கு பதிலாக அவரது மகன் விஜயேந்திரா ஆட்சி செய்து வருகிறார். நான்கைந்து கோடி மானியத்துக்குக் கூட, எம்எல்ஏக்கள் அவரிடம் கைஏந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது எனக் கூறப்பட்டது. ஊழல் உச்சத்தில் உள்ளது’ என பாஜக‌ எம்எல்ஏ., பாசன கவுடா பாட்டீல் யத்னால், விதான பரிஷத் உறுப்பினர் எச்.விஸ்வநாத் விமர்சனம் செய்தனர். இதனிடையே விஜயேந்திரரின் தனி உதவியாளர் அயனூர் உமேஷ் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால், எடியூரப்பா கண்ணீருடன் முதல்வர் நாற்காலியில் இருந்து கீழே இறங்கினார்.
பின்னர், பசவராஜ பொம்மை தலைமையிலான அமைச்சரவையில் விஜயேந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று எடியூரப்பா கூறிய பட்டியலை கட்சியின் மேலிடம் நிராகரித்தது. ஆனால் அண்மையில் மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், கட்சியை மத்தியிலும், மாநிலத்திலும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கில், விஜயேந்திராவிற்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநில பாஜக எடியூரப்பாவின் கட்டுப்பாடிற்குள் சென்றுள்ளது. இனி பாஜகவினர் குடும்ப அரசியல் என மாற்று கட்சியினரை விமர்சிக்க முடியாது என்று அரசியில் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.