எடியூரப்பா ரேவண்ணாவுக்கு ஒரு நீதி! கெஜ்ரிவாலுக்குஒரு நீதியா? கபில் சிபல் விமர்சனம்

டெல்லி: ஜூன் 22 சிறையில் உள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டது விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் நடத்தை வித்தியாசமானதாக இருக்கிறது என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.
2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது
இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது. இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும், “இதை விட விபரீத உத்தரவு இருக்க முடியாது. இரு தரப்பும் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல், எங்களுக்கு வாய்ப்பளிக்காமல், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றும் அமலாக்கத்துறை வாதிட்டது. இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மீது இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த மனு மீதான் இறுதி தீர்ப்பு ஜூன் 25 வழங்கப்படும் என்றும் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் நடத்தை வித்தியாசமானதாக இருக்கிறது என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியுள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் எடியூரப்பாவுக்கும், பெண்களை கடத்திய பாலியல் வழக்கில் ரேவண்ணாவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்ட போது அவர்கள் ஒன்றும் சாதாரணமான நபர்கள் இல்லை என்று ஜாமீன் வழங்கிய நீதிமன்றங்களுக்கு மாநிலத்தின் முதலமைச்சர்களாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் சட்டத்தின் முன்பு சாதாரண நபர்களாகவே தெரிவது தான் விசித்திரம்” என்று கூறியுள்ளார்.