எதிர்கட்சிகளை பழிவாங்குவதாகமம்தா காட்டம்

கொல்கத்தா, அக். 27- மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜோதிபிரியா மல்லிக்கை அமலாக்கத்துறை நள்ளிரவில் கைது செய்தது.
பல கோடி ரூபாய் ரேஷன் விநியோக ஊழல் தொடர்பாக பொது விநியோகத் துரையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய வனத்துறை அமைச்சருமான ஜோதி பிரியா மல்லிக்கின் கொல்கத்தா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மல்லிக்கின் இரண்டு வீடுகளிலும் வடக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது மூதாதையர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மல்லிக்கின் தனிப்பட்ட உதவியாளர் மற்றும் மல்லிக்கின் பட்டய கணக்காளர் வீட்டிலும் சோதனை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரவு வரை நீடித்த சோதனைகளின் போது, ரேஷன் விநியோக ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நேற்று இரவு கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் மல்லிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, புலனாய்வு நிறுவனங்களை பழி வாங்கும் நோக்கில் ஒன்றிய அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள மல்லிக்கிற்கு ஏதேனும் நேர்ந்தால் பாஜக மற்றும் அமலாக்கத்துறைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மம்தா எச்சரித்துள்ளார்.