எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து

டெல்லி: ஜன. 31
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர். அவர்கள் மீதான நடவடிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றிருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. மரபுப்படி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஏராளமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடரின்போது இளைஞர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்மைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.
இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை என்று கூறி அந்த எம்பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இப்படியாக மக்களவையில் 100 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.