எதிர்க்கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புதுடெல்லி , ஜூன். 16 குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளில் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவு செய்ய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இந்நிலையில், இந்த தேர்தலில் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பணியை பாஜக தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ்குமார், பிஜூ ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோருடன் தொலைபேசி மூலம் விவாதித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை ராஜ்நாத்சிங் கேட்டறிந்ததாகவும், எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை உருவாக்கும் முயற்சியாகவே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் டெல்லி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. அப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் பெயரை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள், ராஜ்நாத்சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் குறிப்பிட்ட வேட்பாளர் பெயர் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்துள்ளார். வேட்பாளரின் பெயர் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படுவதை உறுதி செய்வதில் காங்கிரஸ் ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.