எது வெட்கக்கேடானது?-அமித் ஷா பேச்சுக்கு ப.சிதம்பரம் பதிலடி

புதுடெல்லி: ஆகஸ்ட் . 10 – மணிப்பூர் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்த பின்னரும்கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு செல்ல நேரம் கிடைக்காதது வருந்தத்தக்கது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன அழிப்பு வெட்கக்கேடானது என்று அமைச்சரே (அமித் ஷா) ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதைவிட வெட்கக்கேடானது அதைவைத்து அரசியல் செய்வது என்று கூறியுள்ளார். அதனை நான் ஏற்கவில்லை. அது தவறான கருத்து. இன அழிப்பு பற்றிய விவரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதும், அதைப் பற்றி விவாதிப்பதும் ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும். குறிப்பாக அரசியல் தலைவர்கள்ஃப்ச் க்ஃப்வ்க், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். உண்மையான வேதனை எதுவென்றால் மணிப்பூரில் கலவரம் வெடித்து 100 நாட்கள் கடந்தும்கூட பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரம் இல்லாமல் இருப்பதே” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது உரையாற்றிய அமைச்சர் அமித் ஷா, “மணிப்பூர் வன்முறை கவலையளிக்கிறது. ஆனால், அதன் மீது நடைபெறும் அரசியல் வெட்கக் கேடானது. மணிப்பூரில் அதீத வன்முறை நடந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொண்டாலும் கூட எதிர்க்கட்சிகளின் எதிர்வினை அதிக வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தமைக்கு நாம் ஓர் ஒட்டுமொத்த சமூகமாகத்தான் வெட்கப்பட வேண்டும். அதில் அரசியல் ஆதாயம் தேடக் கூடாது” என்று கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.