
புனே, ஜன.7-
சம்பாஜி மகாராஜாவை பற்றிய எனது கருத்துகள் தவறாக இருந்தால் என் மீது வழக்கு தொடருங்கள் என அஜித் பவார் கூறியுள்ளார். சர்ச்சை கருத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித் பவார் சமீபத்தில் சட்டசபையில் பேசுகையில், “மகாராஜா சம்பாஜி தனது தந்தை சத்ரபதி சிவாஜியால் செதுக்கப்பட்ட சுதந்திர அரசின் பாதுகாவலர். அவர் மதப்பாதுகாவலர் அல்ல என்று கூறினார்.
இவரின் கருத்துக்கு வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பா.ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,
“சம்பாஜி மகாராஜா மத பாதுகாவலர் இல்லை என்று கூறுவது அவரது எண்ணங்களுக்கு துரோகம் செய்வது மட்டும் இன்றி அவருக்கு அநீதி இழைப்பதாகும்” என்றார். இந்தநிலையில் துணை முதல்-மந்திரி பட்னாவிசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் அஜித் பவார் நேற்று பேசியதாவது:- வழக்கு தொடருங்கள்…. பா.ஜனதா தலைவர் என்ன வேண்டுமாலும் சொல்லலாம். அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். நான் துரோகம் செய்திருந்தால் என்மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். சத்ரபதி சம்பாஜியின் எண்ணங்களுக்கு துரோகம் செய்வது என்பது எனது உடலில் மூச்சு இருக்கும் வரை சாத்தியமில்லை. நான் மட்டும் இல்லை எனது பத்து தலைமுறைகள் அவர்களின் எண்ணங்களுக்கு துரோகம் இழைக்காது. எனது கருத்துகளுக்கு அனைவரும் உடன்பட வேண்டும் என்று நான் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் அளவிற்கு என்ன குற்றத்தை இழைத்துவிட்டேன்? சிவாஜி மகாராஜாவை பற்றி கவர்னர் (பகத்சிங் கோஷ்யாரி), மந்திரிகள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறிய ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பற்றி யாரும் பேசுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.