என்ஐஏ விசாரணை நடத்த முடிவு

சென்னை: நவ.15: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதிதாகவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ரவுடி கருக்கா வினோத் மீது வழக்கு பதிவு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு கடந்த அக்.25-ம் தேதி அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நந்தனம் எஸ்.எம். நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (42) மீது 5 பிரிவுகளில் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவரை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
‘‘நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடந்ததால் மன உளைச்சல் அடைந்தேன். என் மகன் 6-ம் வகுப்பு படிக்கிறான். நீட் தேர்வு இருந்தால் அவன் எப்படி டாக்டர் ஆவான். இதனால்தான் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினேன்’’ என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் முன்பும் ஏற்கெனவே அவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். தவிர, அவர் மீது 14 குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதால், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளது.