என்னை பார்த்தால் குமாரசாமிக்கு பயம்: சித்தராமையா பேட்டி

கலபுர்கி, அக். 13- முன்னாள் முதல்வர் ஹெச் டி குமாரசாமி ஐந்து நட்சத்திர ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு அரசியல் நடத்தியதே காங்கிரஸ் ம ஜ தா கூட்டணி ஆட்சி கலைய காரணமே தவிரஅந்த ஆட்சி கவிழ நான் காரணமில்லை என சட்ட மன்ற எதிர்கட்சி தலைவர் சித்தராமையா குமாரசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். நகரில் இன்று நிருபர்களிடம் சித்தராமையா பேசுகையில் தன்னை முதல்வர் என கருதும் நபர் ஓட்டல்களில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்தினார் என்றால் எம் எல் ஏக்கள் அவரை சந்திப்பதாவது எப்படி. இதனால் வெறுத்துப்போன காங்கிரஸ் கட்சியின் 14 எம் எல் ஏக்கள் பாரதிய ஜனதாவுக்கு சென்றனர். ஆனால் அனைவரையும் நான்தான் பாரதிய ஜனதாவுக்கு அனுப்பினேன் என குமாரசாமி குற்றம்சாட்டியபடியே உள்ளார். இவருடைய கூற்று உண்மையானால் ம ஜ தா கட்சியின் மூன்று எம் எல் ஏக்களை அவர் எப்படி பாரதிய ஜனதாவுக்கு அனுப்பியிருக்க முடியும் . என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். மைசூரு பக்கம் தன் கட்சியை பலப்படுத்தவேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்க்காக குமாராம்சாமி வாயிக்கு வந்தபடி பேசி வருகிறார். முன்னரெல்லாம் கூட்டணி அரசை எடியூரப்பா ஆபரேஷன் தாமரை நடத்தி அழித்தார் என சொல்லிக்கொண்டு திரிந்த ம ஜ தா இப்போது என் பெயரை கூறுகிறார்கள். அவர்களுக்கு எத்தனை நாக்குகள் உள்ளன என்பது தெரிய வில்லை. ஒருவேளை கூட்டணி ஆட்சியை கலைக்கும் எண்ணம் எனக்கிருந்திருந்தால் குமாரசாமி முதல்வர் ஆக நான் ஒப்புக்கொண்டிருக்கவே மாட்டேன். 50 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் உள்ள என்னை பற்றி பேச குமாரசாமி யார். 1996 வரை அவர் எங்கே இருந்தார். என்னை கண்டாலே குமாரசாமிக்கு பயம். அதனாலேயே தேவையில்லாமல் என்னை குறி வைக்கிறார். காலை இழுத்து விட்டு சண்டை போடுவது அவருக்கு பழக்கமாகிவிட்டது . கடந்த 50 ஆண்டு கால அரசியலில் இப்படி காலை வாறுபவர்கள் மற்றும் மிரட்டுபவர்கள் பலரை நான் பார்த்தாகிவிட்டது எனவும் சித்தராமையா எச்சரித்தார். ஹெச் டி தேவேகௌடாவும் எதிர்க்கட்சி தலைவராக இருந்துள்ளார். அப்படியென்றால் அதுவும் புடகோஸி பதவியா என எதிர் கேள்வி எழுப்பினார். இரண்டு முறை மாநில முதல்வராக இருந்த ஒருவர் எப்படி பேச வேண்டும் என்பாதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவும் சித்தராமையா தெரிவித்தார்.