என் தலையை வெட்டலாம் – மம்தா ஆவேசம்

கொல்கத்தா, மார்ச் 7-
மேற்கு வங்கத்தில் கடந்த பிப்ரவரி 15ம் தேதியன்று அம்மாநில நிதி மந்திரி சந்திரிமா பட்டாச்சார்யா 2023-24ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, ஆசிரியர்கள் உள்பட தற்போதைய மற்றும் ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கும் என அறித்தார். இதுவரை அரசு அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதத்தை அகவிலைப்படியாக வழங்கி வருகிறது. இருப்பினும் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படியுடன் ஒப்பிடும்போது, இந்த உயர்வு மிகக் குறைவு என கருதும் அம்மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசுடன் இணையான அகவிலைப்படியை கோரி பல்வேறு மாநில அரசு ஊழியர்களின் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு அம்மாநில பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-எங்கள் அரசாங்கத்தால் இனி கூடுதலாக அகவிலைப்படி வழங்குவது சாத்தியமில்லை. எங்களிடம் பணம் இல்லை. கூடுதலாக அகவிலைப்படி வழங்கி உள்ளோம். நீங்கள் மிகழ்ச்சியடையவில்லை என்றால் என் தலையை நீங்கள் வெட்டலாம். இன்னும் எவ்வளவு வேண்டும்? மத்திய மாநில அரசுகளின் ஊதிய விகிதிங்கள் வேறு வேறு. இன்று மேற்கு வங்கத்தில் முழு ஓய்வூதியம் தருகிறோம், அதை நிறுத்தினால் ரூ.20 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி கடன் சுமையை குறைக்கலாம். ஊழியர்களுக்கு ரூ.1.79 லட்சம் கோடி அகவிலைப்படி அரசு செலுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பாங்காக், இலங்கை மற்றும் பிற இடங்களுக்கு செல்ல அனுமதி வழங்கி வருகிறோம். ஆனால் சமையல் வாயுவின் விலையைப் பார்க்கிறீர்களா? அவர்கள் தேர்தலுக்கு ஒரு நாள் கழித்து விலையை உயர்த்திவிட்டார்கள் என்றார்.

https://www.dailythanthi.com/News/India/chop-off-my-head-if-mamata-banerjee-on-protests-over-dearness-allowance-913767