என் பேச்சை நீக்கிவிட்டால் உண்மை மாறிவிடுமா? ராகுல் கேள்வி

டெல்லி: ஜூலை 2:
லோக்சபா சபைக் குறிப்புகளில் இருந்து தமது பேச்சை நீக்கிவிட்டால் உண்மை என்பது மாறிவிடுமா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் அரசு என்னுடைய பேச்சு முழுவதையும் கூட சபைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம்.. எங்களுக்கு கவலை இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பேசினார். ராகுல் காந்தியின் கடுமையான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் கொடுத்தனர். இதனால் லோக்சபாவில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் காரசார விவாதம் நடந்தது.
லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவோ பிரதமர் மோடியோ இந்துக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. இந்துக்கள் என தங்களை அழைத்துக் கொள்கிற பாஜகவினர் வன்முறையில் ஈடுபடுகின்றனர். எப்போதுமே வெறுப்புணர்வை விதைக்கின்றனர். பொய்களைப் பரப்புகின்றனர் எனவும் காட்டமாக பேசினார். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லோக்சபாவில் ராகுல் காந்தி பேசிய சில பகுதிகள், சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அதானி மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்து ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லோக்சபாவிலும் இன்று ராகுல் காந்தியின் பேச்சுகளை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சபைக் குறிப்புகளில் இருந்து என்னுடைய பேச்சை நீக்கிவிட்டால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? மோடி அரசு என்னுடைய பேச்சு முழுவதையுமே கூட சபைக் குறிப்பில் இருந்து நீக்கலாம். நாங்கள் கவலைப்படவில்லை. மோடியின் உலகத்தில் உண்மைகள் நீக்கப்படத்தான் செய்யும். நான் பேசியது உண்மைதான் என்றார்.