என் வீட்டில் இருந்து ஒரு பைசா கூட பறிமுதல் செய்யவில்லை – எ.வ.வேலு

திருவண்ணாமலை: ‘‘என்னிடம் இருந்தோ, எனது வீட்டில் இருந்தோ வருமானவரித்துறை ஒரு பைசாவை கூட பறிமுதல் செய்யவில்லை’’ என்று கடந்த 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் கடந்த 3ம் தேதி அதிகாலை முதல் வருமானவரித்துறை சோதனை நடந்தது. இந்த சோதனையை வருமான வரித்துறையினர் இரவு 10 மணியளவில் முடிவுக்கு கொண்டு வந்தனர். அதை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கடந்த 5 நாட்களாக நடந்த வருமானவரி சேதனையில் என்னை தொடர்புபடுத்தி வெளியான தகவல்கள் எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சோதனை என்னும் பெயரில் வருமான வரித்துறையினர் எனது குடும்பத்தினரை அச்சுறுத்தி, இந்த சோதனையில் ஈடுபட்டனர். அதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவர்கள் வெறும் அம்புதான். அவர்களை ஏவி விட்டவர்கள் எங்கோ இருக்கிறார்கள்.கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் நேரத்திலும் 2 நாட்கள் சோதனை நடத்தி என் பணியை முடக்கினர். ஆனாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றிபெற செய்தனர். கல்லூரியில் பணிபுரியும் சாதாரண ஊழியர்களை கூட தனித்தனியாக சோதனை நடத்தினர். அதை வைத்து கற்பனையான பெயரில் கதைகளை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் இந்த மண்ணுக்கு சொந்தக்காரன். விவசாய குடும்பத்தில் பிறந்தவன். திருவண்ணாமலையில் அச்சகம் தொடங்கி நடத்தினேன்.

பின்னர் லாரி உரிமையாளராகி, திரைப்பட வினியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் சம்பாதித்த பணத்தை கொண்டு, 1991ல் எனது தாய் பெயரில் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனங்களை உருவாக்கினேன். அதனால், இந்த பகுதியில் உள்ள கிராமத்து மாணவர்கள் பொறியியல் படித்தனர். 6 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்று மக்கள் தொண்டு செய்திருக்கிறேன். ஒருவரிடமும் நான் கையூட்டு பெற்றதாக ஒருவராலும் சொல்ல முடியாது. பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறேன். நான் தொடங்கும் கல்வி அறக்கட்டளைக்கு என் மகன்தான் தலைவராக இருக்கிறார். எனக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை.என் பெயரில் 48.33 சென்ட் நிலமும், காந்தி நகரில் ஒரு வீட்டுமனையும், சென்னையில் ஒரு வீடும் உள்ளது. இவற்றை எனது வேட்பு மனுவிலும் தெரிவித்திருக்கிறேன்.

இதைத்தவிர ஒரு சென்ட் இடம் கூட என்னிடம் இல்லை. தொடர்ந்து நான் வருமான வரி செலுத்தி வருகிறேன். 2006-2011 காலங்களில் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது, துறையின் செயல்பாடுகளுக்கு உச்ச நீதிமன்றமே பாராட்டியது. 2013ல் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக என்மீது ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அரசியல் நோக்கத்துக்காக போடப்பட்ட வழக்கு எனக்கூறி திருவண்ணாமலை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். ஆனால் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கீழ்கோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தன